சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்ட வாலிபர் கைது
மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நவிமும்பையை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர் மின்சார ரெயிலுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
மும்பை,
மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நவிமும்பையை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவர் மின்சார ரெயிலுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கி வந்த வாலிபர் ஒருவர், திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம்போட்டார். இதனால் பயந்துபோன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவரது பெயர் சங்கர் நாயர்(வயது28) என்பது தெரியவந்தது. கடந்த 2 வருடமாக அவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.