குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தேன்


குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தேன்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:03 PM GMT (Updated: 2017-08-08T04:33:51+05:30)

குடியாத்தம் அருகே குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தேன் என்று கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் வசித்து வந்தவர் ஓக்குருவி என்கிற கோவிந்தன் (வயது 50). இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருடியதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியே வந்த அவர், கட்டிட கூலி வேலை செய்து வந்தார். கோவிந்தன் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து, அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாடி ரோடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (40) என்பவரை 3–வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு கோவிந்தன் குடித்துவிட்டு சரஸ்வதியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த கட்டையால் கோவிந்தனின் தலையில் அடித்துள்ளார். இதில் கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சரஸ்வதி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்தனர்.

இதுகுறித்து சரஸ்வதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிப்பதாவது:–

எனது கணவர் கோவிந்தன் 2 திருமணங்கள் செய்ததையும், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதையும் மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து அடித்து உதைத்து வந்தார். சிறுவயது மகனை வைத்து கொண்டு மிகவும் சித்ரவதை அனுபவித்து வந்தேன்.

சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்ததில் இறந்துவிட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

புகார் மனு மீது நடவடிக்கை...

கோவிந்தனின் மனைவி சரஸ்வதி, அவரது பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் சேர்ந்த தன்னை அடிக்கடி தாக்கி வருவதாகவும், கடந்த ஜூலை மாதம் 14–ந் தேதி தன்னை கத்தியால் தாக்கியும், கொலை செய்து விடுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜூலை மாதம் 15–ந் தேதி குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவிந்தன் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனு மேல் நடவடிக்கைக்காக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிந்தன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடைபெறாமல் இருந்திருக்கும் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.Next Story