சொத்து தகராறில் தாயை கொன்று போலீசுக்கு தெரியாமல் புதைப்பு விவசாயி கைது
தந்தையை கொலை செய்து கைதானவர் ஜாமீனில் வந்த சில ஆண்டுகளில் தாயையும் கொன்று நிலத்தில் புதைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடினார். விசாரணைக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி,
காட்பாடி பள்ளிக்குப்பம் நடுமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 65). இவரது கணவர் வேலாயுதம். கடந்த சில ஆண்டுகளுக்கு வேலாயுதத்தை அவரது மகன் ஆறுமுகம் (35) கல்லால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கில் ஆறுமுகம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தங்கை ஆனந்தி காட்பாடி போலீஸ் நிலையத்திலும், மற்றொரு தங்கை பொன்னி ஆயுதப்படையிலும் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ராணி கடந்த வாரம் திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது. இது பற்றி ராணியின் மகள் ஆனந்தி, அவர் பணிபுரியும் காட்பாடி போலீஸ் நிலையத்திலேயே புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
வீட்டில் இருந்த ராணி திடீரென மாயமானதில் மகன் ஆறுமுகம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது அவர், தாய் ராணியை கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–ஆறுமுகத்திற்கு திருமணமாகி விட்டது. அவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2011–ம் ஆண்டில், தந்தை வேலாயுதத்துடன் ஆறுமுகம் தகராறு செய்தார்.
அப்போது ஆத்திரத்தில் தந்தையை கல்லால் தாக்கி அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு, தாய் ராணியுடன் ஆறுமுகத்திற்கு சொத்து தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
கடந்த மாதம் 25–ந் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராணியை பெற்ற தாயென்றும் பாராமல் முகத்தை தலையணையால் அமுக்கினார். இதனால் மூச்சு விட முடியாமல் ராணி துடித்தார். கொஞ்சமும் இரக்கமின்றி தாயை அவர் துடிக்க துடிக்க கொன்றார்.
பிறகு, கொலையை மறைக்க முடிவு செய்து, யாருக்கும் தெரியாமல் தாயின் உடலை தனது விவசாய நிலத்துக்கு தூக்கிச் சென்று புதைத்தார். மறுநாள் காலையில் ஏரியிலிருந்து ஒரு லோடு மண்ணை கொண்டு வந்து அந்த இடத்தில் கொட்டி அடையாளத்தை மறைத்துள்ளார்.பிறகு தாயை காணவில்லை என்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஆறுமுகம் நாடகமாடி வந்துள்ளார். தந்தை கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது சிக்கிக் கொண்டார். விசாரணையில் அவரின் நாடகம் அம்பலமானது.
இதையடுத்து ராணி புதைக்கப்பட்ட இடத்தை ஆறுமுகம் அடையாளம் காட்டினார். நேற்று மதியம் 1 மணி அளவில் ராணியின் உடலை தோண்டி எடுக்கும்பணி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மண்ணை அகற்றி பிணம் மீட்கப்பட்டது.தோண்டி எடுக்கப்பட்ட உடல், மாலை 4 மணிக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை கொலை செய்த சில ஆண்டுகளிலேயே தாயையும் கொன்று புதைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடிய விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.