நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 49 பேர் சிறைபிடிப்பு
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் இந்த படகுகளை கண்டதும் வேகமாக வந்து மடக்கி பிடித்தனர். இதில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ஒரு படகில் இறங்கி மீனவர்களை கடற்படையினர் தாக்கினர். அப்போது அதில் இருந்த பாலமுருகன், செல்வமுருகன் ஆகிய மீனவர்களும், கடற்படை வீரர் ஒருவரும் கடலுக்குள் நிலைதடுமாறி விழுந்தனர். உடனே அவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர். பின்னர் அந்த படகையும், அதில் இருந்த மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
இதைதொடர்ந்து மற்றொரு படகில் இருந்த கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கனிஷ்டன், பாண்டி, ரமேஷ், முனியசாமி, மணி ஆகிய 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இதேபோல மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த பாண்டி, பஞ்சு, வடிவேல், ராஜலிங்கம் ஆகிய 4 மீனவர்களையும், அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த கிருஷ்ணன், கண்ணன், குமார், பால்சாமி ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மேலும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 4 படகுகள் மற்றும் 20 மீனவர்களையும், கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 படகுகள் மற்றும் 14 மீனவர்களையும் என மொத்தம் 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று காங்கேசம் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமில் விசாரித்து வருகின்றனர்.
இந்த தகவலை நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 92 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்தனர். இவர்களில் 77 பேர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். 15 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். தற்போது 49 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.