நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விசைப்படகில் மோதினர் துப்பாக்கி முனையில் 41 மீனவர்கள் சிறைபிடிப்பு


நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விசைப்படகில் மோதினர் துப்பாக்கி முனையில் 41 மீனவர்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2017 4:45 AM IST (Updated: 9 Aug 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விசைப்படகில் மோதி துப்பாக்கி முனையில் 41 மீனவர்களை சிறைபிடித்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி தளங்களில் இருந்து 314 விசைப்படகுகளில் 1,300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து செல்லாட்சி (வயது 50) என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ஸ்ரீராம் (18), ரவி (52), கடல்ராஜா (35), லட்சுமணசாமி (42), ரவி (45) ஆகிய 5 பேரும், சரவணன் (30) என்வருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும் (சரவணன்), மாரிமுத்து (40), கவி (25), சக்திவேல் (25), ராஜேந்திரன் (45) ஆகிய 5 பேரும், லட்சுமணன் (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும் (லட்சுமணன்), திருவள்ளுவர் ஒலி (60), வீரையா (70) ஆகிய 3 பேரும், மணிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜெகன் (25), அபினேஷ் (23), மகாலிங்கம் (45), குருநாதன் (40) ஆகிய 4 பேரும், கணேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் (29), பிரவீன் (21), செல்லமுருகன் (25), காமராஜ் (30), ராஜேந்திரன் மகன் பிரவீன் (20) ஆகிய 5 பேர் என மொத்தம் 22 பேரும் நேற்று முன்தினம் இரவு சுமார் 18 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதே பகுதியில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணிஸ்டன் (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும்(கணிஸ்டன்), பாண்டி (40), முனியாண்டி (28), மணி (40), ரமேஷ் (25) ஆகிய 5 பேரும், நைனாமுகமது என்பவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சாகுல்ஹமீது (30), அழகர் (30), மாரியப்பன் (32), ராமகிருஷ்ணன் (38), இப்ராகிம் (35), அய்யப்பன் (55) ஆகிய 6 பேரும், சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் எடிசன் (30), ரிச்சாட்சன் (28), பாரூக் (40), ஜோசப் (45) ஆகிய 4 பேரும், கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரல்மார்க்ஸ் (34), ஜான்சன் (35), முருகேசன் (50), காதர் (20) ஆகிய 4 பேர் என மொத்தம் 19 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினார்கள். இதில் அந்த விசைப்படகு சேதமடைந்தது. மேலும் இந்த விசைப்படகில் இருந்த பாலமுருகன், செல்லமுருகன் ஆகியோர் மற்றும் இலங்கை கடற்படை வீரர் ஒருவரும் கடலுக்குள் தவறி விழுந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 2 மீனவர்களையும் மீட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் சிறைபிடித்து சென்றதாக நினைத்து கொண்டு அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 39 விசைப்படகு மீனவர்கள் மற்றும் 10 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்றனர்.

இதற்கிடையில் இலங்கை கடற்படை வீரரை தமிழக மீனவர்கள் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திற்கு அழைத்து வருவதாக தகவல் பரவியது. இதனால் அசம்பாவிதம் ஏதுவும் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், துணை இயக்குனர் சர்மிளா, உதவி இயக்குனர் சிவக்குமார், அறந்தாங்கி கோட்டாட்சியர் சரவணன், புதுக்கோட்டை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மணமேல்குடி தாசில்தார் சுவாமிநாதன், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் மீன்வளத்துறையினர், போலீசார், கடலோர காவல் குழுமத்தினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்திற்கு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் தமிழக மீனவர்கள் மீட்ட இலங்கை கடற்படை வீரரை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் பரபரப்பு குறைந்தது. இலங்கை கடற்படையினர் 10 விசைப்படகுகள் மற்றும் 30 விசைப்படகு மீனவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மீனவர்கள் சேர்த்து மொத்தம் 41 விசைப்படகு மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவமுகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 41 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ கிராமங்கள் சோகத்தில் முழ்கி உள்ளன.


Next Story