விக்கிரவாண்டி அருகே வியாபாரி அடித்துக் கொலை


விக்கிரவாண்டி அருகே வியாபாரி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 8 Aug 2017 10:30 PM GMT (Updated: 8 Aug 2017 8:50 PM GMT)

விக்கிரவாண்டி அருகே வியாபாரியை அடித்துக்கொலை செய்து கிணற்றில் உடலை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே வியாபாரியை அடித்துக்கொலை செய்து கிணற்றில் உடலை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சடகோபன் (வயது 42). இவர் அதே கிராமத்தில் சிமெண்டு வியாபாரம் செய்து வந்தார். மேலும் கட்டுமான பணிக்காக இரும்பு பொருட்களை வாடகைக்கும் விட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலை வி‌ஷயமாக விக்கிரவாண்டிக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர், சடகோபனின் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால், அவரது செல்போன் ‘சுவிட்ச்–ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பல இடங்களில் சடகோபனை தேடினார்கள். இருப்பினும் எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை பெரியதச்சூர் அருகே சாலமடம் என்ற இடத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் கிணற்றில் சடகோபன் பிணமாக மிதந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்குள் கிடந்தது. அந்த கிணற்றின் மேல்பகுதியில் ரத்தக்காயம் படிந்திருந்தது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளஞ்செழியன், சப்–இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தடயவியல் நிபுணர் சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார்.

சடகோபனின் தலை, முகம் ஆகிய இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்துவிட்டு உடலையும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் கிணற்றில் வீசிச்சென்றிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக சடகோபன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் விக்கிரவாண்டியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சடகோபனுக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், கவியரசன் (16) என்ற மகனும், காவ்யா (12) என்ற மகளும் உள்ளனர்.

வியாபாரியை கொலை செய்து கிணற்றில் உடலை வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story