மும்பை மாநகராட்சி பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்


மும்பை மாநகராட்சி பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:19 AM IST (Updated: 11 Aug 2017 4:19 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை வாரம் இருமுறை கட்டாயம் பாடவேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மும்பை,

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

‘வந்தே மாதரம்’ பாடலை மராட்டியத்திலும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவரும், சட்டசபை தலைமை கொறடாவுமான ராஜ் புரோகித் மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

ஆனால், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி, மஜ்லீஸ் கட்சி எம்.எல்.ஏ. வாரீஷ் பதான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும் நான் அதை பாடமாட்டேன்” என்று வாரீஷ் பதானும், “என்னை நாட்டைவிட்டு வெளியே தூக்கிப்போட்டாலும், அந்த பாடலை என்னால் பாட முடியாது” என்று அபு ஆஸ்மியும் கூறினார்கள்.

இவர்களுக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மறுப்பவர்கள் துரோகிகள் என்று அந்த கட்சி தலைவர் திவாகர் ராவ்தே கடுமையாக சாடினார். இதனால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், மும்பை மாநகராட்சி பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின்போது, பா.ஜனதாவை சேர்ந்த கோரேகாவ் வார்டு கவுன்சிலர் சந்தீப் பட்டேல் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மேற்கோள்காட்டி, “நாட்டிற்காக ரத்தம் சிந்திய தலைவர்கள் குறித்தும், தேசப்பற்று குறித்தும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய நேரமிது. இதற்கு தேசபக்தி பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை மும்பையில் உள்ள பள்ளிக்கூடங்களில் வாரத்தில் இருமுறையாவது பாட கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.

கவுன்சிலர் சந்தீப் பட்டேலின் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ரவி ராஜா (காங்கிரஸ்), சமாஜ்வாடி உறுப்பினர் ரயீஸ் சேக் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர். இருப்பினும், மாநகராட்சியை அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனா மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இந்த தீர்மானம் நடைமுறைக்கு வர உள்ளது.

Next Story