லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்


லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:46 AM IST (Updated: 11 Aug 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், முதல்–மந்திரி சித்தராமையாவிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

வீரசைவ மற்றும் லிங்காயத் ஆகியவை ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அது தனித்தனியான சமுதாயம் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று, அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், மந்திரிகள் எம்.பி.பட்டீல், சரணபிரகாஷ் பட்டீல், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் லிங்காயத் சமுதாயம் வேறு, வீரசைவ சமுதாயம் வேறு என்றும், பசவண்ணரால் தோற்றுவிக்கப்பட்டது தான் லிங்காயத் சமுதாயம் என்றும், அவரது கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால், லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து மனு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:–

லிங்காயத் சமுதாயம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பசவண்ணரால் தோற்றுவிக்கப்பட்டது தான் லிங்காயத் சமுதாயம். அந்த சமுதாயத்திற்கு என்று தனி வரலாறு உள்ளது. இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலும் லிங்காயத் சமுதாயத்திற்கும், வீரசைவ சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து ஏற்கனவே அரசுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி புதிய மதம் உருவாக்க முடியாது. ஆனால் தனி மதமாக அங்கீகரிக்க முடியும். இதுதொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்து மனு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க தயாராக உள்ளது. அதே நேரத்தில் லிங்காயத் சமுதாயத்தினர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வசித்து வருகிறார்கள். அதனால் மத்திய அரசும் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க எதிர்ப்பும் இல்லை.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

இந்த நிலையில் நேற்று இரவு மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் லிங்காயத் சமுதாயத்தினர், முதல்–மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story