காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மாணவி மீது திராவகம் வீசிய அக்காள் கணவர் கைது


காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மாணவி மீது திராவகம் வீசிய அக்காள் கணவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2017 5:00 AM IST (Updated: 12 Aug 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் மாணவி மீது திராவகம் வீசிய அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்தவர் நடேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மாமனார் வீட்டருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய மனைவி மற்றும் மனைவியின் தாய், 17 வயது தங்கை ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, போர்வை போர்த்திக்கொண்டு வந்த மர்ம நபர் சிறுமியின் மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

படுகாயமடைந்த சிறுமியை அவருடைய தாய், அக்காள் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி பிளஸ்–2 படிக்கும் மாணவி ஆவார்.

பின்னர் இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் திராவகம் வீசிய நபர் போர்வை போர்த்திக்கொண்டு வந்ததால் மாணவியால் சரியாக அடையாளம் சொல்ல முடியவில்லை. இதையடுத்து சம்பவத்தன்று மாணவியுடன் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பவத்தன்று இரவு மாணவியின் அக்காள் கணவரான நடேசன் அந்த தெரு வழியாக வேகமாக சென்றதை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இது குறித்து நடேசனிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி மீது திராவகத்தை வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:–

எனது மனைவியின் தங்கை மீது எனக்கு காதல் ஏற்பட்டது. நான் பலமுறை அவளிடம் கூறி எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டேன். ஆனால் அவள் அதற்கு மறுப்பு தெரிவித்தாள். எனவே எனக்கு கிடைக்காத அவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு வீட்டில் எனது மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது திராவகத்தை வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன்.

நான் போர்வை போர்த்திக்கொண்டு வந்ததால் யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது என நினைத்தேன். ஆனாலும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story