கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை,
அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில்நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மதுரை கோட்டத்தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். கோட்டச்செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தென்மண்டல பொதுசெயலாளர் நல்லச்சாமி, விஜயராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையில்லாமல் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களை சரக்கு ரெயில்களில் கார்டுகளாக அனுப்பி வருகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள 98 ரெயில்நிலையங்களில் 572 ஸ்டேசன் மாஸ்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 230 பேர் வடமாநிலத்தவர். இவர்கள் ஊருக்கு சென்றுவர குறைந்தபட்சம் 15 நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால், ஸ்டேசன் மாஸ்டர்கள் பற்றாக்குறையால் அனைவரும் விடுப்பு எடுக்க முடியாத நிலை உள்ளது. அதாவது மதுரை கோட்டத்தில் 25 சதவீதத்துக்கு பதிலாக 6.6 சதவீதம் ஸ்டேசன் மாஸ்டர்களே பணியாற்றி வருகின்றனர். 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த அலவன்சுகளை 1½ வருடத்துக்கு மேலாகியும் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இன்னும் 2 வருடங்களில் 60 ஸ்டேசன் மாஸ்டர்கள் மதுரை கோட்டத்தில் ஓய்வு பெற உள்ளனர். ஆனால், இன்று வரை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, ஸ்டேசன் மாஸ்டர்களை மாற்றுப்பணியிடங்களுக்கு அனுப்புவதை மதுரை கோட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்வதுடன் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.