சோளிங்கர் அருகே இளநீர் வியாபாரி கல்லால் தாக்கி படுகொலை


சோளிங்கர் அருகே இளநீர் வியாபாரி கல்லால் தாக்கி படுகொலை
x
தினத்தந்தி 12 Aug 2017 4:33 AM IST (Updated: 12 Aug 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே இளநீர் வியாபாரி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

சோளிங்கர்,

சோளிங்கர் அருகே இளநீர் வியாபாரி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் – தம்பி உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர் மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள பாராஞ்சி காலனி பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 47), இளநீர் வியாபாரி. இவரது மனைவி அமுலு. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தினகரனை பிரிந்து அமுலு சென்னையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தனியாக வசித்து வந்த தினகரன், அதே பகுதியை சேர்ந்த பிரபு (35), அவரது தம்பி அய்யப்பன் (32) மற்றும் சுரேஷ் (42), ஜெகன் (27) ஆகியோருடன் சேர்ந்து அடிக்கடி மதுகுடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பாராஞ்சி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் 5 பேரும் மதுகுடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, அய்யப்பன், சுரேஷ், ஜெகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தினகரனை கல்லால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் தினகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தினகரனின் தந்தை துரைசாமி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்து, பிரபு, அய்யப்பன், சுரேஷ், ஜெகன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story