4 நாட்கள் தொடர் விடுமுறை: ஒரே நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை விடப்பட்டதையடுத்து வெளியூரில் தங்கி வேலை பார்த்தவர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் விக்கிரவாண்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (திங்கட்கிழமையும்), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் நேற்று முன்தினம் இரவு முதல் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். இதேபோல் பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருபவர்களும் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் கார்களில் சென்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு உடனுக்குடன் சுங்கவரி வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக நேற்று அதிகாலை 2 மணி முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கச்சாவடி அதிகாரிகள் விரைவாக வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்து உடனுக்குடன் செல்ல வழிவகை செய்தனர். அதாவது சென்னை– திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியின் 6 வழிப்பாதைகளில் அனுப்பப்படும். ஆனால் நேற்று விழுப்புரம்– சென்னை மார்க்கம் செல்லும் வாகனங்களின் 3 வழிப்பாதைகளையும் கூடுதலாக திறக்கப்பட்டு 9 வழிப்பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் வாகனங்கள் நிற்கும் இடத்திற்கே சுங்கச்சாவடி ஊழியர்கள் சென்று, சுங்கவரி வசூல் செய்தனர். இருப்பினும் சுமார் 4 மணி நேரமாக இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்து அதன் பிறகே சரியானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.