அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று பிரசார பயணம்
அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசார பயணம் நடக்கிறது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொள்கிறார்.
திருப்பூர்,
அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் பிரசார பயணம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:–
அத்திக்கடவு–அவினாசி திட்டம் காமராஜர் ஆட்சி காலம் முதல் இன்று வரை கனவு திட்டமாக, கானல்நீராக உள்ளது. தற்போது தமிழக அரசு மேலும் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் மூலமாக திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 70 பெரியகுளங்கள், 538 குட்டைகள் அனைத்துக்கும் கால்வாய் மூலமாக தண்ணீரை தேக்கி, மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். இது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும்.
இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வாகன பிரசார பயணம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த பிரசார பயணத்துக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இன்று காலை 9 மணிக்கு பில்லூர் அணைக்கு கீழ் அத்திக்கடவு தேக்கம்பட்டி அருகே ஆற்றை அவர் பார்வையிடுகிறார். பின்னர் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் காரமடையில் பிரசார வாகன பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து காலை 11.30 மணிக்கு அன்னூர், மதியம் 1 மணிக்கு அவினாசி, மாலை 3 மணிக்கு சேவூர், 4 மணிக்கு நம்பியூர், 5 மணிக்கு குன்னத்தூர் வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்றடைகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு பெருந்துறையில் அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை விளக்கி பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நான்(ஜி.கே.மணி), பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், பொதுநலன் சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசார பயணத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வடிவேல், திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் (வடக்கு), குமார்(தெற்கு), மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை சண்முகம், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் புருசோத்தமன் உள்பட திரளானவர்கள் கலந்துகொள்கிறார்கள்.