தாம்பரத்தில் ரெயில்வே சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் மழையால் பாதிப்பு ரெயில்கள் இயக்கம் தாமதம்


தாம்பரத்தில் ரெயில்வே சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் மழையால் பாதிப்பு ரெயில்கள் இயக்கம் தாமதம்
x
தினத்தந்தி 14 Aug 2017 5:30 AM IST (Updated: 14 Aug 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் நடைபெற்று வந்த ரெயில்வே சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பணிகளால் ரெயில்கள் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட்டது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைப்பதற்கான ரெயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிகள், கடந்த சில மாதங்களாக தாம்பரத்தில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாலம் அமைந்துள்ள இடம் அருகே நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு மேல் அங்குள்ள 3 தண்டவாளங்கள் அறுத்தெடுக்கப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, 40 டன் எடை கொண்ட கான்கிரீட் பிளாக்குகள் பதிக்கும் பணிகள் நடைபெற்றது.

இதனால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள், சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை செல்லும் ரெயில்கள் அனைத்தும் ஒரே தண்டவாளம் மூலம் இயக்கப்பட்டன.

இதனால் ரெயில்கள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே சென்று வந்தன. மேலும் சில ரெயில்கள் இரவில் அதிக நேரம் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்படி ரெயில்களின் இயக்கம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற பகுதிகளில் கனமழை பெய்தது. எனவே இந்த பணிகளில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை 7.40 மணிக்கு முடிக்கப்பட வேண்டிய பணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஆனது. மேலும் அறுத்தெடுக்கப்பட்ட 3 தண்டவாளங்களில் ஒரு தண்டவாளத்தின் கீழ் பகுதியில் மட்டுமே 7 கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கப்பட்டன.

மீதமுள்ள 2 தண்டவாளத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய 20 பிளாக்குகள் மழை காரணமாக அமைக்க முடியாமல் போனது. எனவே மீண்டும் அங்கு இரண்டு தண்டவாளத்தை பழையபடி அமைத்துவிட்டனர். விடுபட்ட இந்த பணிகள் மீண்டும் அடுத்த வாரம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story