‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி


‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2017 11:45 PM GMT (Updated: 2017-08-16T03:43:54+05:30)

‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் நேற்று காலை கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற செப்டம்பர் மாதம் 17–ந் தேதி, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவு தினத்தையொட்டி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூகநீதி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் நிறைவு பேருரையாற்றுகிறார். டாக்டர் அன்புமணிராமதாஸ் எழுச்சியுரை ஆற்றுகிறார். அகில இந்திய அளவில் சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களும், தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள், பல அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகவும், அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாகவும் இது அமையும்.

தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் டாக்டர் ராமதாஸ், சமூக நீதிக்காக செய்த பணிகள் ஏராளம். அருந்ததியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் டாக்டர் ராமதாஸ். அதுபோல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டை ஏற்படுத்திக்கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் எல்லா சமுதாயத்தினருக்கும் உரியவாறு தொகுப்பு இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருக்கிறது. அங்கு உள்ளதைப்போல் தமிழகத்திலும் தொகுப்பு இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு நாடு முன்னேறவில்லை. நமக்கு பின்னால் சுதந்திரம் பெற்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் நாம் பின்தங்கியுள்ளோம். மாணவர்களுக்கு ஒரே தரமான இலவச கல்வி கிடைக்கவில்லை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தொழிலும் வளர்ச்சியடையவில்லை, விவசாயம் செழிக்கவில்லை. இளைஞர் சக்தியை எந்தவொரு நாடு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறதோ அந்த நாடுதான் வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்படும்.

இந்தியாவின் வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதைப்போக்க வட மாநில நதிகளை தென்மாநிலத்தோடு இணைக்க வேண்டும். இதற்காக உலக வங்கிகள், மற்ற நாடுகள், தொண்டு நிறுவனங்கிளின் உதவிகளை பெற்று நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். நிர்வாக வசதிக்காகவும் அரசின் திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடையவும் விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, காஞ்சீபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை இரண்டாக பிரிக்க வேண்டும்.

‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டு கட்டாயம் விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த விலக்கு அளிக்கும் நிலை நிரந்தரமாக தொடர வேண்டும். 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின்னர் ‘நீட்’ தேர்வை நடத்தலாம். முதலில் பாடத்திட்டத்தை மாற்றவும், கற்பித்தல், கற்றல், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவந்த பின்னர் ‘நீட்’ தேர்வை நடத்த வேண்டும். அதுவரை விதிவிலக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், துணைத்தலைவர்கள் ஹரிகரன், அன்புமணி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, முன்னாள் செயலாளர் பழனிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story