கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி வீடுகளில் கருப்பு கொடியேற்று போராட்டம்


கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி வீடுகளில் கருப்பு கொடியேற்று போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:30 AM IST (Updated: 16 Aug 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி வீடுகளில் கருப்பு கொடியேற்று பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனூர்– குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதையடுத்து தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு பணிகளும் தொடங்கப்படவில்லை.

தற்போது கொள்ளிடம் ஆறு வறட்சியின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் எய்யல்லூர், சிறுகாட்டூர், ஆச்சாள்புரம் என்று சுமார் 15–க்கும் மேற்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் சிதம்பரம், கடலூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

அதேநேரத்தில் வரும் மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வரும் நீரை சேமித்து வைக்க கதவணையுடன் கூடிய தடுப்பணையை உடனடியாக கட்ட வேண்டும் என்று கொள்ளிட கரையோர கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

உடனடியாக தடுப்பணை கட்டுமான பணியை தொடங்க வேண்டும். இல்லையெனில் சுதந்திர தினத்தன்று வருகிற 15–ந்தேதி கொள்ளிடக்கரை கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக 12–ந்தேதி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டம் நடந்தது. அதில் 14–ந்தேதிக்குள்(அதாவது நேற்று முன்தினம்) கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்காவிட்டால் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர்.

அதன்படி எந்த ஒரு பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி தடுப்பணை கட்ட முன்வராத அரசை கண்டித்தும், உடனடியாக தடுப்பணையை கட்டக்கோரியும் கொள்ளிடக்கரையோரம் உள்ள கிராமங்களான செட்டிதாங்கல், கீழகடம்பூர், மேலகடம்பூர், தொரப்பு, வேளம்பூண்டி, அண்மொழிதேவன், எய்யலூர் உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட கிராமகளில் வீடுகள் மற்றும் கடைகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் செய்தனர்.


Next Story