சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்


சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2017 9:45 PM GMT (Updated: 2017-08-16T20:29:56+05:30)

ஆரணி அருகே சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடந்தது.

ஆரணி,

ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆரணி மற்றும் ஆரணியை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

நேற்று முன்தினம் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கிராம மக்கள் சாலையை சீரமைக்கக் கோரி ஊராட்சி மன்ற சாலையில் தேங்கி உள்ள மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டநேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலையை உடனடியாக சீரமைக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story