டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2017 12:45 AM GMT (Updated: 24 Aug 2017 11:26 PM GMT)

கணியம்பாடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கணியம்பாடி,

கீழ்அரசம்பட்டு நாயக்கன்பாளையம் முஸ்லிம் தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. வேலூர் மாவட்ட மேலாளராக ரவிச்சந்திரன், கீழ்அரசம்பட்டு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களாக இளங்கோவன், அண்ணாதுரை, விற்பனையாளர்களாக சுரேஷ்பாபு, கல்யாணசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

இத்தெருவின் வழியே பெண்கள் மளிகைக் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரைஸ்மில் ஆகியவற்றுக்கு சென்று வருகின்றனர். மாணவர்கள் அருகே உள்ள டியூசன் சென்டருக்கும், மேல்நிலைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல இந்த வழியை தான் பயன்டுத்தி வருகின்றனர். வெளியூரில் இருந்து இங்கு மதுகுடிக்க வரும் ‘குடி’மகன்கள் காலி பாட்டில்களை அருகில் உள்ள சாலை, கால்வாய், வயல்களில் வீசி செல்வதால், உடைந்த கண்ணாடி துண்டுகள் பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கிறது.

மேலும் குடி போதையில் ‘குடி’மகன்கள் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 5 ஆண்டுகளாக பொதுமக்கள் பல இடங்களில் மனுக்களை கொடுத்துள்ளனர். எனினும், அதிகாரிகள் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடை தொடர்பாக ஏற்பட்ட ஒரு தகராறில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு கடையின் முன்பு அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் பாண்டி, இங்கு டாஸ்மாக் கடை இருக்காது.

இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், எனவே பொதுமக்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடையை மூடுமாறு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் கூறியதை அடுத்து, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது.


Next Story