ஓமலூரில் போலீஸ் பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த மொபட் மோதி ஓட்டல் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல் போராட்டம்


ஓமலூரில் போலீஸ் பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த மொபட் மோதி ஓட்டல் தொழிலாளி பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-26T02:13:11+05:30)

ஓமலூரில் போலீஸ் பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த மொபட் மோதி ஓட்டல் தொழிலாளி பலியானதால், சேலத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் 10–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற பழனிசாமி (வயது 45). இவர் அங்கு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் காய்கறி வாங்கி கொடுக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 22–ந் தேதி ஓட்டலுக்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக பழனிசாமி மோட்டார் சைக்கிளில் சென்றார். உடன் ஓட்டலில் பணிபுரியும் ஒரு பெண்ணும் சென்றார்.

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பட்டு (32). இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் மாறுதலாகி ஓமலூர் வந்தார். அன்றைய தினம் ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து மொபட்டில் போலீஸ் நிலையத்திற்கு பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பழனிசாமியின் மோட்டார் சைக்கிளும், சப்–இன்ஸ்பெக்டர் பட்டுவின் மொபட்டும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பழனிசாமி தலையில் பலத்த காயம் அடைந்து, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டு லேசான காயம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. உயிரிழந்த பழனிசாமிக்கு தேன்மொழி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டு கதறி அழுதனர். அதன் பின்னர், நேற்று பிற்பகல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், ஓமலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த விபத்து குறித்து உறவினர்கள் கூறும்போது, பெண் சப்–இன்ஸ்பெக்டர் பட்டு வேண்டுமென்றே பழனிசாமி மோட்டார் சைக்கிள்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர். ஆனால். போலீசார் பழனிசாமிதான் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, விபத்துக்கு காரணமான அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, இந்த விபத்து தொடர்பாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில் போலீசார் விபத்தை வேண்டும் என்றே மாற்றி வழக்குப்பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, சம்பந்தப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், சம்பந்தப்பட்ட சப்–இன்ஸ்பெக்டரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், அதை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து உடலை வாங்காமலேயே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று (சனிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.


Next Story