மத்திகிரியில் சமுதாய கூட வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்


மத்திகிரியில் சமுதாய கூட வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-26T02:13:27+05:30)

மத்திகிரியில் சமுதாய கூட வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஓசூர் உதவி கலெக்டரிடம், அரசியல் கட்சிகள் சார்பில் மனு.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க., தமிழர் வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–

ஓசூர் நகராட்சிக்குட்பட்ட மத்திகிரி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், தற்போது அதே இடத்தில் குப்பையை கொட்டி, தரம் பிரித்து அதனை எரியூட்டுவது போன்ற நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சமுதாய கூடம் அமைந்துள்ள பகுதியில், அரசு அலுவலகம், நூலகம் அமைந்திருப்பதுடன், அதிகளவில் மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் இந்த வி‌ஷயத்தில் உதவி கலெக்டர் தலையிட்டு, குப்பை பிரிக்கும் திட்டத்தை அந்த சமுதாய கூட வளாகத்தில் மேற்கொள்வதை தடுத்து அந்த சமுதாய கூட கட்டிடத்தை முறைப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை மனுவை ஓசூர் உதவி கலெக்டரிடம், ஓசூர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வாசுதேவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ‌ஷபீர், ஓசூர் நகர தலைவர் சவுத் அகமது, துணைத்தலைவர் ஜபியுல்லா, தே.மு.தி.க. நகர செயற்குழு உறுப்பினர் வடிவேலு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஓசூர் நகர செயலாளர் காவேரி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வழங்கினார்கள்.


Next Story