காரைக்குடி–திருச்சி இடையே இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் தொழில் வணிக கழகம் கோரிக்கை


காரைக்குடி–திருச்சி இடையே இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் தொழில் வணிக கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2017 10:30 PM GMT (Updated: 26 Aug 2017 6:22 PM GMT)

திருச்சி வழியாக செல்லும் ரெயில்களை பிடிப்பதற்கு வசதியை காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி.திராவிடமணி, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் அழகப்பன், துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், இணைச்செயலாளர்கள் கந்தசாமி, சையது, லயன்ஸ் சங்க நிர்வாகி கண்ணப்பன் ஆகியோர் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கும் காரைக்குடிக்கு ரெயில் மூலம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தொழில் நகரான காரைக்குடியில் இருந்து வேலை தொடர்பாக பெரும்பாலான வியாபாரிகள் ரெயில் மூலமே பொருட்களை வாங்க சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதிய ரெயில்கள் இல்லாததால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிடிப்பதற்கு வசதியாக காரைக்குடியில் இருந்தும், அங்கிருந்து காரைக்குடி செல்வதற்கும் இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்.

சென்னையில இருந்து அதிகாலை திருச்சிக்கு வரும் ராக்போர்ட், மங்களூரு, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள், இதேபோல் கோவையில் இருந்து வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ், பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளுக்கு காரைக்குடி வருவதற்கு இணைப்பு ரெயில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும்படி இயக்கப்பட வேண்டும். அதேபோல் மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இரவு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு போகும்படி ராமேசுவரம்–திருச்சி பாசஞ்சர் ரெயிலை நேரம் மாற்றி இணைப்பு ரெயிலாக அறிவிக்க வேண்டும். மேலும் சேது, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் காரைக்குடிக்கு முன்பதிவு கோட்டாவை உயர்த்திட வேண்டும்.

காரைக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். உணவக வசதி ஏற்படுத்த வேண்டும். தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.


Next Story