யானைகவுனி பகுதியில் மினிவேனில் புகையிலை பொருள் கடத்தி வந்தவர் கைது
சென்னை யானைகவுனி பொன்னப்பசெட்டி தெரு, முத்துகுமாரசாமி மேல்நிலைப்பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
ராயபுரம்,
அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மறித்து சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது.
மினி வேனை ஓட்டி வந்த மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த பிரதீப்குமார்(வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ புகையிலை பொருட்கள், மினி வேன் மற்றும் ரூ.3 லட்சத்து ஆயிரத்து 600 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான பிரதீப்குமார், மாதவரத்தைச் சேர்ந்த சிவா என்பவருக்கு சொந்தமான மினிவேனை மாத சம்பளத்துக்கு ஓட்டி வருவது தெரிந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்து இந்த புகையிலை பொருட்கள் பார்சல்களை ஏற்றிக்கொண்டு சென்னை ஆழ்வார்பேட்டைக்கு கடத்தி சென்றது தெரிந்தது. மினிவேன் உரிமையாளர் சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் செங்குன்றம் போலீசார், பாடியநல்லூர் அருகே மாவா புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரகு(45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 மாவா பாக்கெட்டுகள், ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.