ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் தலையை துண்டித்து கொலை: வருங்கால மனைவியுடன் பழகியதால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
வருங்கால மனைவியுடன் பழகியதால் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரை தலையை துண்டித்து கொலை செய்த வாலிபர்.
ஹாசன்,
வருங்கால மனைவியுடன் பழகியதால் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரை தலையை துண்டித்து கொலை செய்த வாலிபர், போலீசார் கைது செய்ய வந்தபோது தப்பி ஓடினார். அப்போது அவர் லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் கொலைஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஏ.காலேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா. இவரது மகன் நவீன்கவுடா (வயது 25). ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர். இவர் கடந்த 30–ந் தேதி, அந்தப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவரது தலை மாயமாகி இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னராயப்பட்டணா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நவீன்கவுடாவின் செல்போனை கைப்பற்றி, அழைப்பு உள்ளிட்ட விவரங்களை சோதனை செய்தனர்.
வருங்கால மனைவியுடன் பழக்கம்அப்போது, நவீன்கவுடா, அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணும், நவீன்கவுடாவும் அடிக்கடி குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) மூலமும் பேசி வந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) நவீன்கவுடா செல்போனில் பேசி வந்த இளம்பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த அனில் (30) என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு பின்னரும், அந்த இளம்பெண்ணும், நவீன்கவுடாவும் பழகி வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த அனில், நவீன்கவுடாவை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால், அனில் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரிக்க முடிவு செய்தனர். இதற்கிடையே அனில் தலைமறைவானார். இதனால், நவீன்கவுடாவை அனில் கொலை செய்ததை போலீசார் உறுதி செய்தனர். தனது வருங்கால மனைவியுடன் நவீன்கவுடா பழகியதால் அவரை அனில் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
லாரி மோதி சாவுஇந்த நிலையில் அனில் தனது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அனிலை கைது செய்வதற்காக அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அந்தப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கி இருந்த அனிலை பிடித்து போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் அனில் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும், போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
அந்த சமயத்தில், அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று அனில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணைஇதுகுறித்து சென்னராயப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நவீன்கவுடாவை அனில் ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க முடியாது என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் கூறினார்.