மாணவி அனிதா தற்கொலை: போராட்டக்காரர்கள் ரெயில் மறியலுக்கு முயற்சி; பா.ஜனதா அலுவலகம் முற்றுகை


மாணவி அனிதா தற்கொலை: போராட்டக்காரர்கள் ரெயில் மறியலுக்கு முயற்சி; பா.ஜனதா அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 3 Sept 2017 5:30 AM IST (Updated: 2 Sept 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷமிட்டனர்.

கோவை,

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டக்காரர்கள் ரெயில் மறியல் செய்ய முயன்றனர். பா.ஜனதா அலுவலகம் முற்றுகை யிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

வ.உ.சி. பூங்கா மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் காலனி தெருவை சேர்ந்த மாணவி அனிதா (வயது 17) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாததால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது போல், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாணவர்கள் திரள வேண்டும் என்று வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நேற்று தகவல்கள் பரவின. இதனால் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். போராட்டம் நடத்த யாரும் வந்தால் அவர்களை கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேன்களும் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் யாரும் வரவில்லை.

ரெயில் மறியலுக்கு முயற்சி

இந்த நிலையில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை ரெயில் நிலையம் முன் நேற்றுக்காலை திரண்டனர்.

இதற்கு திராவிடர் மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் மதிவதினி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோட்ட செயலாளர் சுசி கலையரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிற்றரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் கோவை ரெயில்நிலையத்துக்குள் நுழைந்து மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

வக்கீல்கள் ஊர்வலம்

வக்கீல்கள் தங்களது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கோவை கோர்ட்டு வளாகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். இதற்கு மக்கள் சிவில் உரிமை கழக பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் 25–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் 30 பேர் நேற்று மதியம் 12 மணியளவில் பார்க்கேட் சிக்னல் அருகே திரண்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும். மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். பார்க்கேட் சிக்னலில் இருந்து புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஏறி காந்திபுரம் சிக்னல் வரை நடந்துசென்றனர். பின்னர் மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதை தாமதமாக அறிந்த போலீசார் பாலத்தின் மீது அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை அங்கி ருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு அவர்கள் மறுத்து தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மேம்பாலத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் தலைமையில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள், பிரதமர் நரேந்திரமோடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் உருவப்படங்களை தீ வைத்து எரித்தனர். உடனே போலீசார் போராட்டம் நடத்திய 30 பேரை கைது செய்தனர்.

நீட் தேர்வு பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஊர்வலமாக சென்று கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழ்ப்புலிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்ப்புலிகள் மாநில துணை பொதுச்செயலாளர் சபாபதி தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் சிறுத்தை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னூர் பயணியர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் பாலுமகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் சிறுத்தைகுமார், அவினாசி தொகுதி துணை செயலாளர் பொன்.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story