விமான நிலையம், கல்லூரிகள் உள்பட 50 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் கவர்னர் உத்தரவு
விமான நிலையம், கல்லூரிகள் உள்பட 50 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார். இதற்காக அவர் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் உடன் சென்றனர். அவர் முத்தியால்பேட்டை வழியாக லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் விமான நிலையத்தின் முன்பு மரக்கன்றுகள் நட்டார். பின்னர் ஏற்கனவே நடப்பட்ட மரங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளது என்று ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமான வீடுகள் காலியாக இருந்தது தெரியவந்தது. உடனே கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகளிடம் ஏன் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு அரசு ஊழியர்கள் வருவது இல்லை என்று கேள்வி எழுப்பினார்? பின்னர் காலியாக கிடக்கும் வீடுகளை மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் வீடுகளும் பராமரிக்கப்படும் என்று கூறினார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் நிலத்தடி நீரை சேமிக்க வசதியாக மழைநீர் சேகரிப்பு தொட்டி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம், விமான நிலையம், கல்லூரிகள் உள்பட 50 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக விவேகானந்தா மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.
நாட்டின் உள்ள நதிகளை பாதுகாக்கும் வகையில் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை கோவை ஈஷா யோகா மையம் தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்ற திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஈஷா யோகா மையம் மற்றும் புதுவை ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடந்தது.
இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார். பின்னர் கவர்னர் அங்கிருந்து சைக்கிள் மூலம் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.