கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,500 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க 3–வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஐந்தருவிகள் மற்றும் மெயின் அருவியிலும் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 3–வது நாளாக அமலில் இருந்து வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீரை தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அறிவுறுத்தினர். மேலும் அவர்கள் மெயின் அருவி, நடைபாதை, முதலை பண்ணை, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்ததால் நேற்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலம், பார்வைகோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் 3–வது நாளாக நேற்றும் பரிசல் இயக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.