நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள்–இளைஞர்கள் சாலை மறியல் 20 பேர் கைது
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள்–இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவபடிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றதால் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் ஏராளமான மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனவருத்தத்தில் உள்ளனர். அப்படி மனவருத்தத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் காலனி தெருவை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என பல்வேறு கட்சிகள், மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை கரந்தை வடவாறுபாலம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆகியவை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவர் இயக்க மாநில செயலாளர் பிரபாகரன், இளைஞர் இயக்க மாநில தலைவர் அருண்சோரி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் கையில் அனிதா உருவப்படத்தை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என கூறி கடைசிநேரத்தில் மாணவர்களை ஏமாற்றிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழகஅரசு பதவி விலக வேண்டும். மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்ததுடன், சாலையில் படுத்துக் கொண்டனர். உடனே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, சாலையில் படுத்திருந்த மாணவர்கள், இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 15 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.