மீனவர் கோஷ்டி மோதலில் இரட்டைக்கொலை: மேலும் 10 பேர் கைது
செய்யூர் அருகே நடந்த மீனவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கம் குப்பம் மற்றும் ஆலம்பர ஊத்துக்காட்டு கோவில் குப்பம் மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு நிறுத்தப்பட்ட படகுகளின் மோட்டார்களில் சிலர் மணல் போட்டது தொடர்பாக மீனவர்கள் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதில் படகுகள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள் எரிக்கப்பட்டது.
இந்த கலவரத்தின்போது ஆலம்பர ஊத்துக்காட்டு குப்பத்தை சேர்ந்த சேகர்(வயது35), ராமகிருஷ்ணன்(34) ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
கலவரம் மற்றும் இரட்டை கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இரட்டைக்கொலை தொடர்பாக ஆலம்பர ஊத்துக்காட்டு கோவில் குப்பத்தை சேர்ந்த தங்கபாபு, சிவா, சுரேஷ் உள்பட 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வந்தனர்.
இரட்டைக்கொலை தொடர்பாக நேற்று மேலும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்(24), ரஞ்ஜீத்குமார்(32), சத்தீஷ்குமார்(38), அருண்குமார் (30), தங்கதுரை (34), அஜீத் (23), மாணிக்கம் (20), சடையன் (36), பிரபு (35) மற்றும் ரமேஷ் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பந்தமாக கடப்பாக்கம் ஆலம்பர குப்பம் ஊத்துக்காட்டு கோவில் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் அந்த பகுதியில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.