நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை கலெக்டர் உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 5 Sept 2017 4:15 AM IST (Updated: 5 Sept 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால், மலைப்பகுதிகளில் வீடு கட்டவும், சாலை அமைக்கவும் மற்றும் சிறிய குன்று பகுதியை சமன்படுத்தவும் பொக்லைன் எந்திரம் போன்ற கனரக எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி பெற்ற பிறகே மேற்கண்ட பணிகள் செயல்படுத்தப்பட்டன. இந்த அனுமதியை பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்தில் குன்று பகுதிகளில சாலை அமைத்தும், நிலத்தை சமன் செய்தும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் சமப்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கட்டிடங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் முறையாக வெளியேற முடியாமல் இருந்ததும், தடுப்புச்சுவர்கள் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.

நீலகிரி மாவட்டத்தின் அமைப்பின் படியும், புவியியல் தொழில்நுட்ப துறையின் ஆய்வறிக்கையின் படியும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பல்வேறு பகுதிகளை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், புவியியல் தொழில்நுட்ப துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய துறைகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த குழு பரிந்துரை செய்த இடத்தில் மட்டும் தான் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளில் முறையற்று கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள மாவட்டமாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு வகைப்படுத்தியது. மேலும் நிலநடுக்கம், பன்முக பேரிடர்கள் ஏற்படக்கூடிய மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டு முறையற்ற கட்டிடங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் புதிதாக கட்டிடம் கட்ட கோரும் மனுக்கள் மீது நிலத்தின் உறுதித்தன்மை, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆய்வுகள் அடிப்படையில் கலெக்டர் தலைமையிலான குழு கட்டிடம் கட்ட அனுமதி வழங்க தடையில்லா சான்று வழங்கிய பிறகே உள்ளாட்சிகளில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதால், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story