‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மறியல்- தர்ணா
தஞ்சையில் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மறியல், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்றும், நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கல்லூரி வாசலுக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். பின்னர் மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகளும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வாசலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் அகுத்ஜினா ஆகியோர் தலைமை தாங்கினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்
தஞ்சையை அடுத்த மணலியில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பேரணியாக ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். ரெயில் நிலையம் அருகே அவர்கள் அனிதா சாவுக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தான் என கூறி கோஷங்கள் எழுப்பியதோடு, நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.