அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யக்கோரி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் குடும்பத்தோடு போராட்டம்


அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யக்கோரி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் குடும்பத்தோடு போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 7:12 PM GMT)

அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்ய கோரி, சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவம், பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ந்தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நுழைவு வாயில் அருகே சாமியானா பந்தல் அமைத்து அங்கு விடுமுறை நாள் என்று கூட பாராமல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இவர்களது போராட்டத்தை இதுவரையில் அரசோ, கல்லூரியோ கண்டு கொள்ளவில்லை. கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக 7–வது நாளான நேற்று, சிதம்பரம் காந்தி சிலை அருகே சாமியானா பந்தல் அமைத்து குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது, கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் ரவிந்திரநாத் மற்றும் புவனகிரி ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தங்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், இல்லையெனில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்திட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.


Next Story