நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
திண்டுக்கல்,
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மரணம் எதிரொலியாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், மாணவி மரணத்துக்கு நீதி கேட்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்–திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏனென்றால் அந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் அரங்கேறியது. எந்த நேரத்திலும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அங்கு மாணவர்கள் திரளலாம் என போலீசார் கருதி வருகிறார்கள்.
இதற்கிடையே, திண்டுக்கல் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று காலை மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதன் எதிரொலியாக அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களை சாலைக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டனர். பிறகு போராட்டத்தை கைவிட்டு மீண்டும் மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்
இதே போல, திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் பிரிவு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், சிறுபான்மையினர் பிரிவு முன்னாள் தலைவர் முகமதுசித்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சாதி, மத வெறி எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ரமணா தலைமை தாங்கினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும் கோஷங்களை எழுப்பினர்.