காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
புதுவை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். இது தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெரோணிகா (வயது 35). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் நேற்று மாலை புதுவை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு வந்தார். அப்போது அவர் ஒரு பையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு கேனில் தண்ணீரை எடுத்து வந்து அவரது மீது ஊற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா அவரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘‘நான் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் என்னுடன் பழகி வந்தார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னை திருமணம் செய்ய மறுத்தார். இது தொடர்பாக நான் புதுவை மகளிர் ஆணையத்தில் புகார் செய்தேன்.
மகளிர் ஆணையத்தில் இருந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்திய போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை’’என்றார்.
இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி லாஸ்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே மண்எண்ணெய் ஊற்றியதால் வெரோணிகாவுக்கு திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெரோணிகா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தாக அவர் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.