இரவுநேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
சென்னையில், இரவுநேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னையில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தன.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவின்படி உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார், செல்போன்கள் பறிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த அஜித்குமார்(என்ற) சிறுபர்பி(19), மணிகண்டன்(என்ற) புறாமணி(19), என்பதும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
செல்போனை பறிகொடுத்தவர்கள் தங்கள் செல்போனின் ஐ.எம்.இ நம்பரை சரியாக சொல்லி வாங்கி செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர்.