திசையன்விளையில் பரபரப்பு நீலதிமிங்கலம் விளையாட்டில் கையை கீறிக்கொண்ட பள்ளி மாணவர்கள்
திசையன்விளையில் பள்ளி மாணவர்கள் நீலதிமிங்கலம் விளையாட்டில் கையை கீறிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை,
இந்தியாவில் நீல திமிங்கல சவால் விளையாட்டு பிடியில் சிக்கி ஆங்காங்கே இளைஞர்கள் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை அளித்து உள்ளது. அதன் கோர முகத்தை அறிந்த மத்திய அரசு இந்த விளையாட்டுக்கு தடை விதித்து உள்ளது. மேலும் தமிழக அரசும் இந்த விளையாட்டை யாராவது பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இருப்பினும் இளைஞர்கள் நீலதிமிலங்கல விளையாட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் நீலதிமிங்கல விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–
திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 2 பேரின் கையில் கீறல் காயங்கள் இருந்தன. அதை பார்த்து சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
உடனே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் வீடுகளில் உள்ள செல்போன்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர்.
அந்த செல்போன்களை ஆய்வு செய்தபோது நீலதிமிங்கலம் விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த மாணவர்கள் நீலதிமிங்கல விளையாட்டில் கையை கீறிக்கொண்டது தெரிந்தது. இதையடுத்து செல்போன்களில் இருந்து நீலதிமிங்கல விளையாட்டை ஆசிரியர்கள் நீக்கினர். மேலும் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீலதிமிங்கல விளையாட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.