அனிதா சாவுக்கு நீதி விசாரணை கேட்டு திருச்சி சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம்
அனிதா சாவுக்கு நீதி விசாரணை கேட்டு திருச்சி சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
நீட்தேர்வு காரணமாக மருத்துவராகும் கனவு சிதைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு நீதி விசாரணை கேட்டு தமிழகம் முழுவதும் மாணவ–மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருச்சியிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள் 2–வது நாளாக நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அனிதா சாவுக்கு நீதி விசாரணை கோரியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் 20 பேர் நேற்று கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரே அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டக்குழு சார்பில் மாணவர்கள் தினேஷ், ஜீவானந்தம், ஷேக் அப்துல்லா, சூர்யா, முகேஷ், மார்க்சிம்கார்க்கி ஆகிய 6 பேர் கடந்த 2–ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று 5–வது நாளாக அவர்களது உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. உண்ணாவிரதம் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை உண்ணாவிரத பந்தலில் இருந்த சூர்யா என்ற மாணவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்களும் உடல்சோர்வுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார்கள்.