அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி சிதம்பரம் மருத்துவகல்லூரி மாணவர்கள் போராட்டம் நேற்று 10–வது நாளாக நீடித்தது.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி அங்கு இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30–ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த பல்கலைக்கழகம் கடந்த 5–ந்தேதி மருத்துவக்கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து ) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. அத்துடன் விடுதியை காலிசெய்யும் படியும் உத்தரவிட்டது.
ஆனால் மாணவ–மாணவிகள் விடுதியை காலி செய்ய மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் மாணவிகள் அனைவரும் அவர்கள் தங்கியுள்ள தாமரை இல்லம் விடுதியின் முன்பும், மாணவர்கள் குமாரராஜன் முத்தையா விடுதியின் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவகல்லூரியில் முதுநிலை பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்ததோடு, அவர்கள் அனைவரை விடுதியை காலி செய்யுமாறு பல்கலைக்கழகம் உத்தரவு விட்டது. ஆனால் முதுநிலை பிரிவு மாணவர்களும் விடுதியை விட்டு காலி செய்யாமல் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் மாணவர்களின் போராட்டம் நேற்று 10–வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவக்கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், இந்த கல்லூரி அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இருப்பினும் தற்போது இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி போன்றுதான் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக உங்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் உங்களுக்கு கிடைக்காது. எனவே போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.
இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.