போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது


போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2017 3:32 AM IST (Updated: 9 Sept 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் பணவசூலில் ஈடுபட்ட போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று நந்திகிராம் எக்ஸ்பிரஸ் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அப்போது மகளிர் பெட்டியில் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி சோதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் நிலேஷ் இதனை கண்டார். பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை நடத்திய நபர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து நிலேஷ் அந்த நபரை பிடித்து அவரது அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தார். அப்போது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், போலி டிக்கெட் பரிசோதகரை பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

இதில், அவரது பெயர் விஸ்வநாத்(வயது35) என்பதும், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதேபோல மலாடு ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடம் பணவசூல் செய்வதாக போரிவிலி ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று முன்தினம் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மாற்றுத்திறனாளி பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் போல ஏறிய ஒரு ஆசாமி டிக்கெட் இல்லாத பயணிகளிடம் பணவசூலில் ஈடுபட்டிருந்தார்.

இதனைக்கண்ட ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் பிரகாஷ் பட்காலே(46) என்பது தெரியவந்தது.


Next Story