புதுவை அருகே துணிகரம்: கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளை
புதுவை அருகே புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவிலில் நள்ளிரவில் புகுந்து உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. காவலாளிகளை தாக்கி விட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
காலாப்பட்டு,
புதுவையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள புத்துப்பட்டில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் பல்வேறு கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இங்கு இரவுநேர காவலாளிகளாக கார்த்திக், குணசேகரன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் ஈடுபட்டு விட்டு அங்கேயே தூங்கினார்கள்.
இந்தநிலையில் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்தது. சத்தம் கேட்டு காவலாளிகளான கார்த்திக், குணசேகரன் ஆகிய இருவரும் அங்கு வந்து பார்த்தனர்.
அப்போது மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காவலாளிகளை ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த காவலாளிகள் மயங்கி விழுந்தனர். இதன்பின் அந்த ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்று உள்ளனர்.
நேற்று அதிகாலை அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றபோது காவலாளிகள் காயத்துடன் மயங்கி கிடந்ததையும், உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காவலாளிகளை எழுப்பி விசாரித்தனர். அப்போது தான் மர்ம ஆசாமிகள் 3 பேர் கோவிலுக்குள் புகுந்து தங்களை தாக்கி கட்டிப் போட்டு விட்டு உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்று விட்டது தெரியவந்தது.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரித்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கோவிலில் புகுந்து கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. எனவே குறைந்த அளவிலேயே பணம் மற்றும் தங்க, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருக்க வேண்டும் என்று கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.