டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்


டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 10 Sept 2017 5:00 AM IST (Updated: 10 Sept 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை(தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மாரியப்பன் கென்னடி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அணிகள் பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்தார். தற்போது டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருக்கும் மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ளார். மாரியப்பன் கென்னடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. இங்கு அவரது உதவியாளர் விஜயகுமார் வந்து அலுவலகத்தில் பொதுமக்கள் தரும் மனுக்களையும், தபாலில் வரும் மனுக்களையும் வாங்கி வைப்பது வழக்கம்.

இந்தநிலையில் சம்பவத்தன்று தபால் மூலம் வந்த ஒரு கடிதத்தை விஜயகுமார் பிரித்து பார்த்துள்ளார். அதில் மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ.க்கு கொலை மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து எம்.எல்.ஏ. உதவியாளர் விஜயகுமார் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் முகவரியை பார்த்தபோது, கரூர் முத்துக்குமார் என்ற பெயரில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story