நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-10T02:49:11+05:30)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலையிடம் கொடுக்க வைத்திருந்த மனுவில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் மாநில சுயாட்சியை வலியுறுத்தியும் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது உள்ள எடப்பாடி அரசு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி உள்ளது. இதனால் மனமுடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே தாங்கள் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு பெற தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்க வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை மறித்து அனுமதியில்லாமல் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்க முயன்றதாகக்கூறி 16 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story