தனியார் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து கேரள கல்லூரி மாணவிகள் 2 பேர் சாவு


தனியார் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து கேரள கல்லூரி மாணவிகள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 10 Sept 2017 5:14 AM IST (Updated: 10 Sept 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள கல்லூரி மாணவிகள் 2 பேர் இறந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

சிக்கமகளூரு,

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ–மாணவிகள் 3 தனியார் சுற்றுலா பஸ்களில் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிக்கமகளூரு பகுதியில் பாபாபுடன் கிரி மலை, முல்லையங்கிரி மலை, மாணிக்கதாரா அருவி உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர், நேற்று அதிகாலை மாணவ–மாணவிகள் அனைவரும் திரும்பி கேரளாவுக்கு பஸ்களில் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு பஸ்சிலும் தலா 32 மாணவ–மாணவிகள் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு பஸ், சிக்கமகளூரு அருகே பேளூர் சாலையில் மாகடி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளிடையே சிக்கி 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர், போலீசார் பலியான 2 மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பலியான மாணவிகள் அயரின் மரியா (வயது 20), அயரின் ஜெபாஸ்டின் (21) என்பதும், 20 பேர் படுகாயமடைந்ததும் தெரிவந்தது. படுகாயமடைந்தவர்களின் பெயர் விவரம் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள கல்லூரி மாணவிகள் 2 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story