தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை: ஜி.கே. மணி பேட்டி


தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை: ஜி.கே. மணி பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2017 5:15 AM IST (Updated: 11 Sept 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்று நெய்வேலியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

நெய்வேலி

நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், வருகிற 17–ந் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள சமூகநீதி மாநாட்டில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும், ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க கோரி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு தெரிவிப்பது, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 26 நாட்கள் பணி வழங்க வேண்டும், 26 நாட்கள் வேலை கேட்டு போராட்டம் செய்த போது பணி நீக்கம் செய்யப்பட்ட 3 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்,

என்.எல்.சி. சுரங்கத்தில் மேல் மண் எடுத்தல் மற்றும் சூரிய ஒளி மின் திட்டங்களை தனியாருக்கு வழங்கும் போது நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க சி.பி.ஐ. குழு அமைக்க வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்தில் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் என்.எல்.சி.யின் அருகில் உள்ள கிராமங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்களை அமல்படுத்து என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராசு, செயலாளர் திலகர், மாநில துணை தலைவர் முத்து வைத்தியலிங்கம், முருகவேல், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட தலைவர் ராஜசேகர், தேவதாஸ்படையாண்டவர், பட்டாளி தொழிற்சங்க அலுவல செயலாளர் வைத்தியநாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து, மாநில தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வு தேவையில்லை. மத்திய, மாநில அரசுகள் இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ்–2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மருத்துவ கல்வி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரியலூர் மாணவி அனிதா மருத்துவக்கல்வி படிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் இதே நிலையில் நிறைய மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்ளனர்.

மருத்துவப்படிப்பை தவிர இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தன்மையுள்ள வேலைகளை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் கடல்நீர் உட்புகுந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கொள்ளிடத்தில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என பா.ம.க. கேட்டுக்கொள்கிறது. காலம் தாழ்த்தினால் போராட்டம் நடத்துவோம். பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் பா.ம.க. போராடும். அடுத்த மாதம் அக்டோபர் 2–ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story