வாஷி ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் கல்வாவில் மீட்பு
நவிமும்பை வாஷி 31–வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் நான்ஷிண்டே. இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன் தனது 3 வயது மகன் ரகுவை அழைத்து கொண்டு வாஷி ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
மும்பை,
நவிமும்பை வாஷி 31–வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் நான்ஷிண்டே. இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன் தனது 3 வயது மகன் ரகுவை அழைத்து கொண்டு வாஷி ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் உள்ள கடையில் வடபாவ் வாங்கி கொண்டிருந்த போது சிறுவன் ரகு திடீரென காணாமல் போனான்.
இதுபற்றி அவனது தாய் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்வையிட்ட போது, அவனை போதை ஆசாமி ஒருவர் கடத்திச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஆசாமியை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில், சிறுவன் ரகு கல்வா பகுதியில் அழுது கொண்டு நின்றிருக்கிறான். அவனை அந்த பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி மீட்டு வாஷி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் ரகுவை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவனை கடத்திய போதை ஆசாமி கல்வாவில் விட்டு சென்றது தெரியவந்து உள்ளது. அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.