நியூடவுனில் உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் நிரந்தரமாக மூடல்


நியூடவுனில் உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் நிரந்தரமாக மூடல்
x
தினத்தந்தி 11 Sep 2017 12:08 AM GMT (Updated: 11 Sep 2017 12:08 AM GMT)

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதால் இன்று முதல் அந்த கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது.

வாணியம்பாடி,

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதால் இன்று முதல் அந்த கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது. இதனால் வெளியூர் பஸ்கள் வாணியம்பாடியை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொழில்துறையில் முன்னணியில் உள்ள நகரம் வாணியம்பாடியாகும். பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு தொழில் நிமித்தமாக வந்து செல்கின்றனர். பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது.

இங்கு பைபாஸ் சாலையில் நியூடவுனில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. சேலம்–பெங்களூரு–சென்னை இடையே இரு வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில்பாதையில் தினமும் 50–க்கும் மேற்பட்ட முறை ரெயில்கள் செல்வதால் ரெயில்வே கேட் அவ்வப்போது அடைக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற நேரங்களில் ஆபத்தான முறையில் பயணிகள் வாகனங்களுடன் ரெயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.

இந்த சமயங்களில் பலர் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கவும் செய்துள்ளனர். எனவே வாகன போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க இந்த இடத்தில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக இங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரெயில்வே துறை ரூ.8 கோடியும், நெடுஞ்சாலைத்துறை ரூ.8 கோடியும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதன் காரணமாக இன்று முதல் அந்த ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வரும் பஸ்கள் வாணியம்பாடி நகருக்குள் வருவதற்கு இந்த ரெயில்வே கேட் பிரதானமாக இருந்தது. ஆனால் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் புதூர் மேம்பாலம் வழியாக 5 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே வாணியம்பாடியை அடுத்த வளையாபட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்கொல்லி மேம்பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த பணிகள் ஒரு பகுதியில் மட்டுமே முடிந்துள்ளன. மறுபுறம் பாலம் கட்டும் பணி முடங்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடு, கடைகள் அகற்ற வேண்டிய நிலையில் இட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பிரச்சினை உள்ளது. அரசு தரும் இழப்பீடு போதியதாக இல்லை என்றும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. அதனால் பாலம் கட்டும் பணியும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் நியூ டவுன் ரெயில்வே கேட்டும் நிரந்தரமாக மூடப்படும் என்பதால் வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி நகருக்குள் வரவேண்டிய வாகனங்கள் தொலைதூரம் சென்று திரும்ப வேண்டியிருப்பதால் இருமார்க்கத்தில் செல்லும் வாகனங்களும் வாணியம்பாடிக்குள் வராமல் செல்லும் நிலையும் உள்ளது. எனவே வளையாம்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பதோடு இன்று தொடங்க உள்ள நியூடவுன் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை பணிகளையும் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story
  • chat