வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை கேட்பதாக புகார் கண்களில் கருப்பு துணி கட்டியபடி வந்து கலெக்டரிடம் மனு
வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூடுதல் தொகையை செலுத்த வலியுறுத்துவதாக கூறி கோவை கணபதிமாநகர் பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டியபடி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை வசதி, வீட்டுமனை பட்டா, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைகளில் அழுகிய சின்ன வெங்காயத்தை ஏந்தியபடி மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:– கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயம் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் காற்று காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. எனவே சேதம் அடைந்த வாழை மரங்கள் மற்றும் அழுகிய சின்ன வெங்காயத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை கணபதிமாநகரை சேர்ந்த பொதுமக்கள் வீட்டு வசதி வாரியத்தை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டியபடி வந்து அளித்த மனுவில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வாங்கினோம். தற்போது அந்த நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலத்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், நாங்கள் எற்கனவே செலுத்திய தொகையை விட தற்போது கூடுதல் தொகையை வட்டியுடன் செலுத்த வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் எங்களது வீடுகளுக்கான பத்திரத்தையும் தர மறுக்கிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
காரமடை பகுதியில் பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் அளித்த மனுவில், நாங்கள் காரமடை வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.275 வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று எங்களுக்கு நாள் ஒன்றுக்கான சம்பளத்தை ரூ.183 குறைத்து நிர்ணயம் செய்து உள்ளனர். இதனால் நாங்கள் கடந்த 2 மாதங்களாக சம்பளம் பெறவில்லை. நாங்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு தினக்கூலியாக ரூ.275 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காளம்பாளையம் ஒருங்கிணைந்த காலனிகள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். குறிச்சி பகுதி தி.மு.க.வினர் வழங்கிய மனுவில், குறிச்சி குளத்துக்கு வரும் தண்ணீர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாலம் வேலை நடைபெறுதாக கூறி நிறுத்தப்பட்டது. தற்போது சாலை அமைக்கும் பணிக்காக தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் குறிச்சி குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எனவே தடைகளை அகற்றி குறிச்சி குளத்தில் தண்ணீர் தேங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.