பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்காக மசோதா நிறைவேற்ற பா.ம.க. போராடும்
பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்காக மசோதா நிறைவேற்ற பா.ம.க. போராடும் என சவுமியா அன்புமணி பேசினார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் பஞ்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்த கருத்தரங்கம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் மெர்சிலீமா தலைமை தாங்கினார். நிறுவனர் ஜேம்ஸ் விக்டர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட தலைவர் சுகன்யா வரவேற்றார்.
இதில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பஞ்சாலை பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர். அவற்றுக்கு தீர்வு காண பா.ம.க. துணை நிற்கும் என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘தற்போதைய தமிழக அரசின் தலைமை சரியில்லை. இந்த அரசை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தது மக்கள் செய்த பெரும் தவறு. அமைச்சர்களுக்கு மக்களின் கஷ்டம் தெரியவில்லை. ஆனால், மக்கள் நலனுக்காக போராடும் பா.ம.க., பஞ்சாலை பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை களைய தீவிரம் காட்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவர போராடுவோம். இதற்காக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பார்’ என்றார்.
இந்த கருத்தரங்கில், தமிழக அரசு கொண்டுவர இருக்கும் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கையில் பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிலாளர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். வேடசந்தூர் அருகே மூடப்பட்ட நூற்பாலையில் வேலை செய்த 600 தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆலோசகர்கள் திவ்யா, தீபா மற்றும் பஞ்சாலை தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து சவுமியா அன்புமணி ராமதாஸ் சின்னாளபட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தில் சுங்குடிசேலை தயாரிப்பதை பார்வையிட்டார். பின்னர் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.