‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டிவனம்,
‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில், அரியலூர் மாவட்டத்தை
சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில், அனிதாவின் சாவுக்கு நீதிக்கேட்டும்,. ‘நீட்’ தேர்வை ரத்த செய்யக்கோரியும் பல்வேறு கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று தங்களது வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வை உடனே ரத்து செய்ய மத்திய –மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்த தகவலின் பேரில் ரோசனை போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.