5 வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கிய அரசு ஊழியர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு


5 வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கிய அரசு ஊழியர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 6:54 PM GMT)

ஜாக்டோ–ஜியோவின் ஒரு பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விருதுநகர்,

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் ஒரு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 870 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 323 பேர் ஆசிரியைகள். மொத்தமுள்ள ஆசிரியர்களில் 7.4 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 3,060 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1,770 பேர் பெண்கள். மொத்தமுள்ள அரசு ஊழியர்களில் 18.5 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு சில அரசு அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டத்தில் 400 பெண்கள் உள்பட 900 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடங்குவதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்ற போது போலீசார் நுழைவு வாயில் கதவுகளை பூட்டி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள்–போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களை உள்ளே அனுமதிக்குமாறு அரசு ஊழியர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை உள்ளே அனுமதித்தனர். கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே அமர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story