மாயமானவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
விருதுநகர் அருகே மாயமானவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் உடலை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தோண்டி எடுத்து சோதனை மேற்கொண்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள குமிழங்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு சீனிவாசனின் மனைவி வேலம்மாள் மதுரை ஐகோர்ட்டில் தனது கணவரை கண்டுபிடித்து தர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். சீனிவாசன் மாயமான தினத்தையொட்டி விருதுநகர்–கள்ளிக்குடி ரெயில் பாதையில் கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்த ஒருவர் அடையாளம் தெரியவில்லை எனக்கூறி விருதுநகர் ரெயில்வே போலீசார் அவரது உடலை விருதுநகர் பொது மயானம் அருகே புதைத்தாக தெரிய வந்தது.
ரெயில்வே போலீசார் குறித்து வைத்திருந்த அங்க அடையாளங்கள் மாயமான சீனிவாசனின் அடையாளங்களுடன் ஒத்துப்போவது போல் இருந்ததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெயில்வே போலீசாரால் புதைக்கப்படட உடலை தோண்டி எடுக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ரெயில்வே போலீசாரின் ஒத்துழைப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் சோதனை மேற்கொண்டனர்.